ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரிடர் மேலாண்மை கொள்கையை மறுஆய்வு செய்ய ஆணையம் அமைப்பீர்

சுங்கை பட்டாணி, டிச 24- நாட்டில் பேரிடர்களை எதிர் கொள்வது மற்றும் கையாள்வதில் சம்பந்தப்பட்ட துறைகளின் பங்களிப்பை மறுஆய்வு செய்ய ஆணையத்தை அமைக்கும்படி அரசாங்கத்தை பி.கே.ஆர். கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ளவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக உதவிகள் வழங்கவும் இந்நடவடிக்கை அவசியமாவதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் காணப்பட்ட மந்த நிலை பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் காணப்படும் அலட்சியம் காரணமாக பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை நம்மால் உணர முடிகிறது. ஆகவேதான், பேரிடர் மேலாண்மை தொடர்பான கொள்கைகளை ஆராய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதன் மூலம் பிரச்சனைகள் மறுபடியும் நிகழாதிரு
ப்பதை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

எனினும், மீட்பு பணியில் மந்த நிலை காணப்பட்டதற்கு மலேசிய ஆயுதப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை போன்ற அரசு நிறுவனங்களை சில தரப்பினர் குறை கூறுவதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார்.

தங்களுக்கு முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அத்துறைகள் நிச்சயம் விரைவாக செயல்பட்டிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெள்ள பேரிடர் மேலாண்மையில் பலவீனங்கள் நிலவுவதை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pengarang :