ALAM SEKITAR & CUACAHEADERAD

நீர்ப் பெருக்கைத் தடுக்க கிள்ளான் ஆற்றின் கரைகள் மேம்படுத்தப்படும்- மந்திரி புசார்

ஷா ஆலம், டிச 25- எதிர் வரும் காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க கிள்ளான் ஆற்றின் கரைகள் வலுப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அதே சமயம் ஆற்றின் அருகே உள்ள நீர் இறைப்பு பம்ப் மையங்களும் அகற்றப்படும் என்று அவர் சொன்னார். ஒவ்வொரு முறையும் வெள்ளத்தில் பாதிக்கப்படும் அந்த பம்ப் கருவிகளை பழுதுபார்க்க 2 முதல் 3 கோடி வெள்ளி வரை செலவு பிடிப்பதாக அவர் சொன்னார்.

இத்திட்டத்திற்கான அடிப்படை வேலைகள் முற்றுப் பெற்று விட்டன. இம்மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்டதைப் போல் ஆற்று நீர் பெருக்கெடுக்கும் சம்பவங்கள் இனியும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். இப்பணிகளை இன்னும் ஒரு மாத காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

ஆற்று நீர் அருகிலுள்ள கிராமப் பகுதிகளில் நுழைவதை தடுப்பதற்கான தடுப்பணையாக விளங்கும் கரைகளை வலுப்படுத்துவதற்கு பைலிங் வேலைகளை செய்ய வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கம்போங் புக்கிட் லஞ்சோங்கில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :