ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஷா ஆலமில் உள்ள 14 நிவாரண மையங்களில் 1,343 பேர் இன்னும் தங்கியுள்ளனர்

ஷா ஆலம், டிச 28- ஷா ஆலம் வட்டாரத்தில் நேற்று மாலை 4.00 மணி வரை 14 தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் தொடர்ந்து செயல்படும் வேளையில் அதில் 1,343 பேர் இன்னும் தங்கியுள்ளதாக ஷா ஆலம் மாவட் போலீஸ் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் கூறினார்.

செக்சன் 27 அல்-முனாவ்வாரா பள்ளிவாசல் மற்றும் செக்சன் 26 ஆலம் மேகா 2 தேசிய இடைநிலைப்பள்ளி ஆகியவை புதிதாக திறக்கப்பட்ட இரு துயர் துடைப்பு மையங்களாகும் என்று அவர் சொன்னார்.

நேற்று மேலும் மூன்று துயர் துடைப்பு மையங்கள் மூடப்பட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

வெள்ளம் தொடர்பில் நேற்று 726 புகார்கள் பெறப்பட்டதாக கூறிய அவர், இதனுடன் சேர்த்து வெள்ளம் சம்பந்தமாக செய்யப்பட்ட மொத்த புகார்களின் எண்ணிக்கை 12,725 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் போலீஸ் நிலையங்கள், ரோந்து மோட்டார் சைக்கிள் பிரிவு,குற்றச் செயல் தடுப்பு ரோந்துப் பிரிவு ஆகியவற்றின் வாயிலாகவும் புகார்கள் பெறப்படுகின்றன என்றார் அவர்.


Pengarang :