ECONOMYMEDIA STATEMENTNATIONAL

துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் வெ.1,000 பெற பாரங்களை பூரத்தி செய்ய வேண்டியதில்லை

ஷா ஆலம், டிச 28- அரசாங்க அல்லது தனியார் துறையால் நடத்தப்பட்ட தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உடனடியாக உதவித் தொகை வழங்குவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டவர்களின்  பெயர்ப் பட்டியல் தற்காலிக நிவாரண மையங்களிடமிருந்து பெறப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அரசாங்க மற்றும் தனியார் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்கள் உதவித் தொகைக்கு பதிவு செய்ய வேண்டியதில்லை. அங்கு தங்கியிராதவர்கள் மட்டுமே விரைவில் அமைக்கப்படவிருக்கும் ஓரிட மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றார் அவர்.

மூன்றாம் பிரிவைச் சேர்ந்தவர்கள் அதாவது வெள்ளத்தின் போது வீட்டிலேயே இருந்தவர்கள் மட்டுமே விண்ணப் பாரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். காரணம் அவர்கள் குறித்த விபரங்கள் நமக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பதிவு நடவடிக்கையை மேற்கொள்வர். இத்திட்டம் வரும் ஜனவரி முதல் மேற்கொள்ளப்படும்.

மேலும், அடையாள ஆவணங்களை இழந்தவர்கள் மட்டுமே போலீசில் புகார் செய்ய வேண்டும். இப்பாரங்களை  பூர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஓரிட மையங்களுக்கு நேரில் வரலாம் அல்லது இணையம் வாயிலாக பாரங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று அமிருடின் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்களை பதிவு செய்து  நிதி வழங்கும் நடவடிக்கை வரும் புதன் கிழமை தொடங்கி மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், வரும் ஜனவரி இறுதிக்குள் நிதி வழங்கும் பணி முற்றுப் பெறும் என்றார்.


Pengarang :