ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் நிவாரண மையங்களில்  தங்கியுள்ளோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது

கோலாலம்பூர், டிசம்பர் 28 – சிலாங்கூரில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

 அதே சமயம் பகாங், மலாக்கா, கிளந்தான் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. 

சமூக நலத் துறையின் InfoBencana  இணையதளத்தள பதிவின்படி  ஐந்து மாநிலங்களில் 6,136 குடும்பங்களைச் சேர்ந்த 20,026 பேர் இன்னும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிரவு  6,563 குடும்பங்களைச் சேர்ந்த 21,544 பேர் இம்மையங்களில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று இரவு 45 துயர் துடைப்பு மையங்களில் 8,644 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 39 மையங்களில் 7,751 ஆகக் குறைந்துள்ளது. 

புக்கிட் சாங்காங், கோல லங்காட்டில் உள்ள லங்காட் ஆற்றில் நீர்மட்டம், காலை 7.15 மணியளவில் 3.66 மீட்டர் என்ற எச்சரிக்கை அளவை எட்டிய பின்னர் தற்போது குறைந்து வருவதாக publicinfobanjir.water.gov.my  எனும் அகப்பக்கம் கூறியது.

 இதற்கிடையில், மாநிலத்தில் ஆறு சாலைகள் வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறை அறிவித்தது. பந்திங்-டிங்கில் பாலம், ஜாலான் கெந்திங் பெராஸ் – கோல கிளவாங் ,  ஜாலான் பிஆர்பி 7/2 புக்கிட் ரஹ்மான் புத்ராசுபாங் ஷூட்டிங் ரேஞ்சிற்கு செல்லும் பாலம் மற்றும் ஜாலான் PJU 7, முத்தியாரா டமன்சாரா எம்.ஆர்.டி. நிலையத்திற்கு முன்புறம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில்  ஜாலான் கோல குபு பாரு – பெரத்தாக் செல்லும் புக்கிட் பிரேசர் சாலையில் இலகு ரக வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். 


Pengarang :