ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான், பெட்டாலிங் பகுதியில் 2,630 டன் குப்பைகளை எம்.பி.எஸ்.ஏ. அகற்றியது

ஷா ஆலம், ஜன 2- வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணியின் போது ஷா ஆலம் மாநகர் மன்றம் 2,630 டன் குப்பைகளை நேற்று அகற்றியது.

கிள்ளான் மாவட்டத்தில் 2,256 டன் குப்பைகள் அகற்றப்பட்ட வேளையில் மேலும் 374 டன் குப்பைகள்  பெட்டாலிங் மாவட்டத்தில் அகற்றப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பெட்டாலிங் மாவட்டத்தைப் பொறுத்த வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செக்சன் 13, செக்சன் 19, செக்சன் 22, (கம்போங் கெபுன் பூங்கா) செக்சன் 23, செக்சன் 28, (கம்போங் லஞ்சோங் ஜெயா) செக்சன் யு1 செக்சன் யு 3 ஆகிய பகுதிகள் மீது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

கிள்ளான் மாவட்டத்தில் செக்சன் 32, செக்சன் 33, (ஆலம் இண்டா) செக்சன் 35 (தாமான் டேசா கெமுனிங்) ஆகிய பகுதிகளில் துப்புரவுப் பணி முழுமையடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாமான்  ஸ்ரீ மூடாவில் மிக அதிகமாக அதாவது 2,148 டன் குப்பைகள் நேற்று அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இங்கு 1,822 டன் குப்பைகள் அகற்றப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய குப்பைகளை அகற்றும் பணி வியாழக்கிழமை வரை 35 முதல் 40 விழுக்காடு வரை பூர்த்தியடைந்த வேளையில் இன்னும் ஒரு வார காலத்தில் அப்பணிகள் யாவும் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :