ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

ஸ்ரீ மூடாவில் துப்புரவுப் பணிகள் இவ்வாரம் முற்றுப் பெறும்- ஷா ஆலம் டத்தோ பண்டார் தகவல்

ஷா ஆலம், ஜன 4-  தாமான் ஸ்ரீ மூடா பகுதில் வெள்ளத்தினால் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி இவ்வாரம் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியிலிருந்து 11,919 டன் குப்பைகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனத்துடன் ஷா ஆலம் மாநகர் மன்றம் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், ஓரிரு இடங்களில் 100 விழுக்காடு துப்புரவுப் பணிகள் முழுமையடைந்து விட்டதாக சொன்னார்.

எனினும், தாமான்  ஸ்ரீமூடா மிகப்பெரிய குடியிருப்பு பகுதியாக விளங்குகிறது. இங்கு இதுவரை 60 விழுக்காட்டு பகுதிகளில் குப்பைகளை அகற்றப்பட்டு விட்டன. எஞ்சிய பகுதிகளை துப்புரவு செய்யும் பணி வார இறுதிக்குள் முற்றுப் பெறும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ, தலைமையகத்தில் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஐக்கிய அரபு சிற்றரசிடமிருந்து வெள்ள நிவாரணப் பொருள்களை பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக தொழிற்சாலைகள் குப்பைகளை தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்களில் வீசும்படியும் அவர் ஆலோசனை கூறினார்.

சாலையோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் குப்பைகளை வீச வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம். சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில் மறுபடியும் குப்பைகள் வீசப்படுகின்றன. வீடுகளிலிருந்து வெள்ளத்தால் சேதமடைந்த பொருள்களை பலர் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருவதே இதற்கு காரணமாகும் என்றார் அவர்.

 


Pengarang :