ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8.219 குடும்பத்தினர் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றனர்

ஷா ஆலம், ஜன 4– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8,219 பேர் இதுவரை 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளனர்.

சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் வழி மாநில அரசு இதுவரை 82 லட்சத்து 39 ஆயிரம் வெள்ளியை செலவிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உதவித் தொகை வழங்கும் பணியை எளிதாக்க மாநில அரசு வீடு வீடாகச் சென்று உதவித் தொகையை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அவர்  தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை வசதிகளை சரி செய்வது தவிர்த்து இப்பேரிடரில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளி நிதியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

வெள்ளத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள், தனியார் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள்  மற்றும் வீடுகளிலேயே தங்கியிருந்தவர்கள் அல்லது வேறு இடங்களில் அடைக்கலம் நாடியவர்கள் என மூன்று பிரிவுகளாக இந்த நிதி வழங்கப்படுகிறது.


Pengarang :