ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனவரி மாதம் தண்ணீர் கட்டண விலக்களிப்பு

ஷா ஆலம், ஜன 5– வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் கட்டண விலக்களிப்பு இயல்பாக வழங்கப்படும். அந்த சலுகையைப் பெற அவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து ஒரு மாதத்திற்கு விலக்களிக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த சலுகை வழங்கப்படும் இடங்கள் குறித்த பட்டியலை பெங்ருசான் ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவன அகப்பக்கத்தில் காணலாம். சம்பந்தப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் இந்த தண்ணீர் கட்டணச் சலுகையைப் பெற முடியும் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

வீடுகளுக்கான ஜனவரி மாத தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு விலக்களிக்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நேற்று கூறியிருந்தது. அண்மையில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என அது தெரிவித்தது.

சிலாங்கூர் மாநில அரசு அண்மையில் அறிவித்த பந்துவான் சிலாங்கூர் பங்கிட் உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் கூறியது.

கட்டண சலுகை வழங்கப்படும் மாதத்தின் போதும் தண்ணீர் கட்டண பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். எனினும் தகுதி உள்ள வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அது குறிப்பிட்டது.


Pengarang :