ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

ஷா ஆலம் வட்டாரத்தில் குப்பை சேகரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஷா ஆலம், ஜன 6- வெள்ளத்தால் குவிந்துள்ள குப்பைகளை விரைவாக அகற்றுவதற்கு ஏதுவாக மேலும் ஒரு குப்பை சேகரிப்பு நிலையத்தை செக்சன் 35, ஆலம் இம்பியான் பகுதியில் ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைத்துள்ளது.

தற்போது செக்சன் 21, செக்சன் 35, செக்சன் 34, செக்சன் 29, செக்சன் 28, செக்சன் 25 ஆகிய பகுதிகளில் தற்காலிக குப்பை சேகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ரஷிட் ருஸ்லான் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தப்படும் குப்பைகள் இந்த தற்காலிக மையங்களில் சேகரிக்கப்பட்டு பின்னர் கோல லங்காட் மற்றும் ஜெரம் அகிய இடங்களில் உள்ள குப்பை அழிப்பு மையங்களுக்கு கொண்டுச் செல்லப்படும் என அவர் தெரிவித்தார்.

கூடுதல் குப்பை சேகரிப்பு மையங்களை அமைப்பதன் வாயிலாக தினசரி 3,000 டன் குப்பைகளை அகற்றும் இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம். மேலும் இத்தகைய நிலையங்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் அமைப்பதால் குப்பை லோரிகளின் பயண நேரத்தையும் குறைக்க முடியும் என்றார் அவர்.

வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடாவில் குப்பைகளை அகற்றும் பணியைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தாமான்  ஸ்ரீ மூடா பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்வதற்காக மேலும் 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முகமது ரஷிட் சொன்னார்.

இந்த ஐம்பது லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் 35 லட்சம் வெள்ளியை மாநகர் மன்றம் வழங்கும். எஞ்சியத் தொகை மாநில அரசிடமிருந்து பெறப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :