ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

921 ஹிஜ்ரா தொழில்முனைவோருக்கு மோரட்டோரியம் சலுகை- 1.5 கோடி வெள்ளியை சிலாங்கூர் ஏற்கும்

ஷா ஆலம், ஜன 6- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிஜ்ரா அறவாரிய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட மோரட்டோரியம் சலுகைத் திட்டத்திற்கு உண்டான 1 கோடியே 50 லட்சம் வெள்ளி செலவுத் தொகையை மாநில அரசு ஏற்கும்.

சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இரு மாதங்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் மோரட்டோரியம் சலுகையின் வழி 921 ஹிஜ்ரா கடனாளிகள் பயன்ப பெற்றுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் துன்பமிகு அத்தியாயத்திலிருந்து மீள்வதை உறுதி செய்வதில் மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி இரு மாதங்களுக்கு கடன் தொகையை செலுத்துவதை ஹிஜ்ரா ஒத்தி வைத்துள்ளதாக அந்த அறவாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ சுப்பாராடி முகமது நோர் அண்மையில் கூறியிருந்தார்.

இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 29 ஆம் தேதியுடன் மூடப்பட்டதாக கூறிய அவர் இந்த மோரட்டோரியம் சலுகையின் மூலம் விநியோகம், உணவு தயாரிப்பு, சேவை, விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் முனைவோர் பயன்பெறுவர் என்றார்.


Pengarang :