ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோலக் கிள்ளானில் வடிகால் முறையை ஆய்வு செய்வீர்- சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

ஷா ஆலம், ஜன 7– வெள்ளப் பிரச்சனை மீண்டும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய கோலக் கிள்ளான் பகுதியில் வடிகால் முறையை மறு ஆய்வு செய்யும்படி சம்பந்தப்பட்டத் தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தை கிள்ளான் நகராண்மைக் கழகமும் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையும் ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும் என்று கோலக் கிள்ளான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.

அன்றைய தினம் வரலாறு காணாத அளவு 18 மணி நேரத்தில் 180 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதே சமயம் கடல் பெருக்கும் ஒரு சேர ஏற்பட்டதால் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது என்றார் அவர்.

வெள்ள விவகாரத்தில் கிள்ளான் நகராண்மைக் கழகமும் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையும் கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம். தெலுக் கோங், பூலாவ் இண்டா பாரம்பரிய கிராம ம் மற்றும் கோலக் கிள்ளான் முழுவதும் வடிகால் முறையை அவர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு மேம்பாட்டுத் திட்டத்தையும் அங்கீகரிப்பதற்கு முன்னர் வடிகால் முறையின் நீர் கொள்ளளவும் நாட்டின் பருவ நிலை மாற்றமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேம்பட்டாளர் தரப்புக்கு லாபம் கிடைப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் பொருள் சேதத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் திட்டங்களை வகுப்பதில் அதிகாரத் தரப்பினர் மத்தியில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் அலட்சியம் காரணமாக இத்தகைய பேரிடர்களின் போது உயிர்ப்பலியும் ஏற்படுகிறது என்று அவர் வேதனை தெரிவித்தார்.


Pengarang :