ECONOMYMEDIA STATEMENTSELANGOR

நிவராண மையங்களுக்குச் செல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும்

ஷா ஆலம், ஜன 7– வெள்ளத்தின் போது துயர் துடைப்பு மையங்களுக்குச் செல்லாதவர்களுக்கு 1,000 வெள்ளி நிதியுதவி வழங்கும் பணி தொடங்கப்பட்டு விட்டது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பேரிடரின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏதுவாக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ ஜொஹாரி அனுவார் கூறினார்.

இம்மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பணி பகுதி வாரியாக மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தின் போது துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியவர்கள் மற்றும் வீட்டிலேயே இருந்தவர்கள் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.

கிராமத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களால் திரட்டப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பேரிடரின் போது துயர் துடைப்பு மையங்களில் தங்கியவர்கள், தங்காதவர்கள் என்ற வேறுபாடின்றி அனைருக்கும் நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த உதவித் திட்டத்தில் விடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்காக ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு பிறகு வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் தாங்கள் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, துயர் துடைப்பு மையங்களில் தங்கியிராதவர்கள் உள்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி நிதியை வழங்கும் பணியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.


Pengarang :