ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மூன்று மாநிலங்களில் வெள்ளம் வடிகிறது- ஜோகூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

கோலாலம்பூர், ஜன 7– சபா, பகாங், மலாக்கா ஆகிய மாநிலங்களில் வெள்ளம் நிலை சீரடைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அந்த மூன்று மாநிலங்களிலும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

எனினும், ஜொகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நெகிரி செம்பிலானில் எந்த மாற்றமும் இல்லை.

பகாங் மாநிலத்தின் தெமர்லோ, பெக்கான், பெரா, மாரான் மற்றும் ரொம்பினில் உள்ள 22 துயர்துடைப்பு மையங்களில் இன்று காலை 8.00 மணி வரை 782 பேர் தங்கியுள்ளனர். நேற்று 27 மையங்களில் 933 பேர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலாக்காவில் காலை 8.00 மணி நிலவரப்படி அலோர் காஜாவிலுள்ள ஒரு துயர் துடைப்பு மையம் மற்றும் ஜாசினில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 406 பேர் தங்கியுள்ளனர். நேற்று இரவு இந்த எண்ணிக்கை 408 ஆக இருந்ததாக சமூக நலத் துறையின் இன்போ பெஞ்சானா அகப்பக்கம் கூறியது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பொறுத்த வரை இன்று காலை 8.00 மணி வரை மூன்று துயர் துடைப்பு மையங்களில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் தங்கியுள்ளனர்.

சிகாமாட் மாவட்டத்தில் 2,479 பேரும் மூவாரில் 1,058 பேரும் தங்காக்கில் 905 பேரும் பத்து பகாட்டில் 54 பேரும் துயர் துடைப்பு மையங்களில் இன்னும் தங்கியுள்ளனர். 


Pengarang :