ஸ்ரீ மூடா ஆலய வளாகத்தில் இரு தினங்களில் மூன்று டன் உடைகள் விநியோகம்

ஷா ஆலம் ஜன 9- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் இலவசமாக உடைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்வில் கடந்த இரு தினங்களில் மூன்று டன் உடைகள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இங்கு விநியோகிக்கப்படும் உடைகளில் பள்ளி சீருடைகளே அதிகம் பொது மக்கள் அதிகம் தேடும் உடைகளாக உள்ளதாக லீட் யு.பி. மலேசியா அமைப்பின் நிறுவனர் சங்கீதா ஜெயக்குமார் கூறினார்.

மிகவும் குறுகிய நேரத்தில் 150 பள்ளிச் சீருடைகள் முடிந்து விட்டன. இந்த சீருடைகளை அரசு சாரா அமைப்புகள் வழங்கின. நாளை பள்ளித் தவணை தொடங்கும் நிலையில் பள்ளிச் சீருடைகளைப் பெறுவதில் பொதுமக்கள் அதிகம் அக்கறை காட்டுகின்றனர் என்று அவர் சொன்னார்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சமூக நலத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ. கணபதிராவும் இந்த நிகழ்வுக்கு வருகை புரிந்தார்.

இந்த இலவச ஆடை விநியோகத் திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாக சங்கீதா கூறினார்.

இன்று மட்டும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இங்கு வருகை புரிந்தனர். பொதுமக்களின் தேவைக்கேற்ப உடைகளின் ‘கையிருப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஒரு சிலர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி, தந்தை, தாயார், பிள்ளகைள் என அனைவருக்குமாக 30 முதல் 40 உடைகள் வரை எடுத்துச் செல்கின்றனர் என்றார் அவர்.

நேற்று தொடங்கிய இந்த இலவச உடை வழங்கும் நிகழ்வு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.


Pengarang :