ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

கோத்தா கெமுனிங் தொகுதியில் வெ. 1,000 வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும்- கணபதிராவ்

ஷா ஆலம், ஜன 9- தாமான் ஸ்ரீ மூடா உள்பட கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளி உதவித் தொகை வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இதுவரை 100 பேர் அந்த உதவித் தொகையைப் பெற்றுள்ள வேளையில் மற்றவர்களுக்கு இத்தொகையை வழங்கும் பணி அடுத்த வாரம் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என அவர் சொன்னார்.

இந்த மோசமான வெள்ளத்தில் எனது தொகுதியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே. இங்குள்ள மக்களின் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்விவகாரத்தை மந்திரி புசாரின் கவனத்திற்கும் கொண்டுச் சென்றுள்ளேன் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் இலவச உடைகள் விநியோக நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த உதவித் தொகை வழங்கும் பணியை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக பொருத்தமான இடத்தை தயார் செய்யவும் தாங்கள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வட்டாரத்திலுள்ள பள்ளிவாசல்களும் ஆலயங்களும் இந்த நிதி பகிர்ந்தளிப்பு நிகழ்வை நடத்த இணக்கம் தெரிவித்துள்ளன என்றார் அவர்.

நேற்று வரை 20,086 குடும்பங்கள் சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெற்றுள்ளன. இந்நோக்கத்திற்காக மாநில அரசு இதுவர 2 கோடியே 1 லட்சத்து 96 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டுள்ளது.


Pengarang :