ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை நேற்று 2,888 ஆக குறைந்தது

கோலாலம்பூர், ஜன 10- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை நேற்று 2,888 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,251 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து இந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 86 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று 2,714 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்ததாக கூறிய அவர், இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 14 ஆயிரத்து 614 ஆக பதிவாகியுள்ளது என்றார்.

புதிய நோய்த் தொற்றுகளில் 36 அல்லது 1.2 விழுக்காடு கடுமையான தாக்கத்தை கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தையும் எஞ்சிய 2,852 சம்பவங்கள் அல்லது 98.8 விழுக்காடு லேசான தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தையும் சேர்ந்தவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோயாளிகளில் 248 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 117 பேருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. மேலும், நாட்டில் புதிதாக ஒரு நோய்த் தொற்று மையம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூவருக்கு நோய்த் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதன் வழி நோய்த் தொற்று கண்ட வெள்ள அகதிகளின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :