ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோல குபு பாரு தொகுதியில் 1,008 பேர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், ஜன 10– கோல குபு பாரு தொகுதியில் நேற்று நடைபெற்ற செல்வேக்ஸ் ஊக்கத் தடுப்பூசி இயக்கத்தின் போது 1,008 பேர் அந்த மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றனர்.

இந்த தடுப்பூசியைப் பெறுவதற்காக அவர்கள் அதிகாலை 5.40 மணி முதல் காத்திருந்த நிலையில் ஐந்தே மணி நேரத்தில் அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

இத்திட்டத்திற்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தடுப்பூசி இயக்கம்  காலை 9.00 மணிக்குதான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதிகாலை 5.40 முதலே பொதுமக்கள் மண்டபத்திற்கு வெளியே காத்திருக்கத் தொடங்கி விட்டனர் என்றார் அவர்.

இந்த தடுப்பூசி இயக்கத்திற்கு 1,100 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 1,200 பேர் இங்கு திரண்டனர். அவர்களில் சிலர் மைசெஜாத்ரா செயலி வழி வருகைக்கான முன் பதிவைப் பெற்றிருந்தனர். அவர்களை மைசெஜாத்ரா அழைப்புக்கு காத்திருக்கும்படி கேட்டுக் கொண்டதோடு மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டோம் என்று அவர் சொன்னார்.

சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் இரண்டாம் கட்ட செல்வேஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்ள தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோல குபு பாரு தொகுதி நிலையிலான செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி இயக்கம் நேற்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ராசா, கம்போங் சுவாங் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

மாநில அரசின் இந்த ஊக்கத் தடுப்பூசி இயக்கம் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் இம்மாத இறுதி வரை 6 தொகுதிகளில் நடைபெறுகிறது.


Pengarang :