ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

ஸ்ரீ மூடாவில் இலவச பஸ் சேவை தொடரும்- ஆட்சிக்குழு உறுப்பினர் இங் தகவல்

செராஸ், ஜன 10- இம்மாதம் முதல் தேதி தொடங்கி தாமான் ஸ்ரீ மூடா வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காலக் கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களிடமிருந்து இலவச பஸ் சேவைத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இத்திட்டம் தொடரப்படும் என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தை எப்போது நிறுத்துவது என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. இப்பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெரும் எண்ணக்கையிலான கார்கள் இன்னும் பழுதுபார்க்கப்படாததால் இந்த இலவச பஸ் சேவைக்கு வட்டார மக்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதுதான் எங்களின் தலையாய நோக்கம். அதன் அடிப்படையில் தேவை இருக்கும் வரை இச்சேவை தொடரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள “பாய்க்“ திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீ மூடா வட்டாரத்தில் இலவச ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையை மாநில அரசு தற்காலிக அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீ மூடா மையப் பகுதியில் தொடங்கி ஸ்ரீ மூடா போலீஸ் நிலையம், ஜாலான் ஹஸ்ராட் பஸ் நிறுத்தம், என்.எஸ்.கே. பேரங்காடி  பெட்ரோன் நிலையம், அண்டோரா அடுக்குமாடி குடியிருப்பு வழியாக மீண்டும் ஸ்ரீ மூடா மையப்பகுதியில் இச்சேவை முடிவடையும்.


Pengarang :