ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பண்டார் பாரு கிள்ளான் தொகுதியில் வெள்ள உதவி நிதிக்கு 4,000 பேர் விண்ணப்பம்

ஷா ஆலம், ஜன 11- அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பண்டார் பாரு கிள்ளான் தொகுதியைச் சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிலாங்கூர் மாநில அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் சராசரி 500 குடும்பங்கள் இந்த உதவித் தொகையைப் பெற்று வரும் வேளையில் மேலும் அதிகமானோர் உதவித் தொகையைப் பெறும் வகையில் நிதி பகிர்ந்தளிப்புத் திட்டம் விரைவுபடுத்தப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாம் கிம் கூறினார்.

உதவித் தொகை விநியோகத்தை விரைவாக மேற்கொள்வதற்கு ஏதுவாக தினசரி 2,000 பேருக்கு நிதியளிக்க நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள்ள மனு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை அறிவித்தது. 

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பொருள் சேதம் அடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படும் அதே வேளையில் வெள்ளத்தால் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சரி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.


Pengarang :