பெருந்தொற்றுக்கு மத்தியிலும் வெ.800 கோடி முதலீட்டைப் பெற சிலாங்கூர் நம்பிக்கை

ஷா ஆலம், ஜன 21- இவ்வாண்டில் 800 கோடி வெள்ளி மதிப்பிலான நேரடி அந்நிய முதலீட்டைக் கவர சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளதாக முதலீடு மற்றும் வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

கடந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 1,200 கோடி வெள்ளியை விட இது குறைவானதாகும் என்று அவர் சொன்னார். கோவிட்-19 குறிப்பாக ஒமிக்ரோன் நோய்த் தொற்று பரவலின் எதிரொலியாக முதலீட்டில் காணப்படும் நிலைத்தன்மையற்ற போக்கை கருத்தில் கொண்டு குறைவான முதலீட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நோய்த் தொற்று பரவல் காரணமாக பல நாடுகள் எல்லைகளை மூடிவிட்டதால் நமது முதலீட்டு ஊக்குவிப்பு பயணங்கள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது நாம் 800 கோடி வெள்ளி முதலீட்டு இலக்கை நிர்ணயித்துள்ளோம். பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் அந்த இலக்கை அடைய முயற்சி செய்வோம் என்றார் அவர்.

மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் மின்சாரம் மற்றும் மின்னியல், இயந்திரங்கள் மற்றும் கருவிகள், போக்குவரத்து உபகரணங்கள், பானங்கள் மற்றும் ஆயுள் அறிவியல் ஆகிய ஐந்து பிரிவுகளை தாங்கள் இலக்காக கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த இலக்கை அடைவதற்காக இயங்கலை வாயிலாக கண்காட்சிகளை நடத்துவது உள்ளிட்ட நடப்பு சூழலுக்கேற்ற ஆக்கத்திறனுடன் கூடிய முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :