ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 40,000 மாணவர்களுக்கு உதவ 40 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

கோம்பாக், ஜன 24- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 40 லட்சம்  வெள்ளியை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் உதவி வழங்கும் பணி முற்றுப் பெற்றவுடன் மாணவர்களுக்கான இந்த உதவித் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் சொன்னார்.

வெள்ளப் பாதிப்புக்குள்ளான சுமார் 40,000 மாணவர்களை உட்படுத்திய இத்திட்டத்திற்கு 40 லட்சம் வெள்ளி செலவு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

செலாயாங், ஹிடாயத்துல் இஸ்லாம் சூராவ் நிர்வாகத்திடம் எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் சார்பாக நிதி வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்க மாநில அரசு 17 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டம் கடந்த வாரம் முற்றுப் பெற்றதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :