கிள்ளான் மாவட்டத்தில் 12,734 பேர் வெள்ள நிவாரண நிதியை பெற்றனர்

ஷா ஆலம், கிள்ளான், ஜன 24- கிள்ளான் மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 12,734 பேர் மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 1,000 வெள்ளி உதவித் தொகையை பெற்றுள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 12,728  குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் இந்த பேரிடரில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பங்களுக்கு  தலா 10,000 வெள்ளியும் வழங்கப்பட்டதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால்  அப்துல் ராஜி கூறினார்.

தாமான் ஸ்ரீ மூடாவில் மிக அதிகமாக 3,319 பேரும் ஜாலான் கெபுனில் 2,584 பேரும் புக்கிட் ராஜாவில் 1,761 பேரும் பெக்கான் காப்பாரில் 1,412 பேரும் ரந்தாவ் பாஞ்சாங்கில் 1,196 பேரும் தெலுக் காடோங்கில் 1,213 பேரும் பூலாவ் இண்டாவில் 1,085 பேரும் இந்த உதவி நிதியைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த உதவித் தொகைக்கு இதுவரை 71,542 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அவற்றில் 44,106 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதற்காக மாநில அரசு கடந்த மாதம் 21 ஆம் தேதி பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை தொடக்கியது.


Pengarang :