ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பருவநிலை மாற்றத்தை கையாள சிறப்புக் குழு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜன 24- பருவ நிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களைக் கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுற்றுசூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் தலைமையிலான அக்குழு எதிர்காலத்தில் பேரிடர் ஏற்படுவதற்கான சாத்தியத்தை கணித்து அவற்றை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வரையும்  என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரத்தை நான் கடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் எழுப்பினேன். இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த பருவநிலை மாற்றம் மீதான செயல்குழு உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பேரிடர் சாத்தியங்களை எதிர்கொள்வது தொடர்பில் கருத்துகளைப் பெறுவதற்காக கல்வியாளர்கள்,  சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை ஹீ அழைக்கவுள்ளார் என்றார் அவர்.

இங்குள்ள ஜூப்ளி பேராக் அரங்கில் புத்தாண்டு செய்தியை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சூழல், பொருள் விலை போன்ற பேரிடருக்கு பிந்தைய எதிர்விளைவுகளையும் இக்குழு ஆராயும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.

கார்பன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மேம்பாடு மற்றும் பசுமையை காப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பருவ நிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.

 


Pengarang :