ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெ.ஜெயா மாநகர் மன்றம் கடந்தாண்டு வலுவான நிதி நிலையை பதிவு செய்தது

ஷா ஆலம், ஜன 25- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கடந்தாண்டு 2 கோடியே 12 லட்சத்து 33 ஆயிரம் வெள்ளியை உபரியாக பெற்றதான் மூலம் வலுவான நிதி நிலையை பதிவு செய்துள்ளது. 

மொத்த வருமானம் மற்றும் செலவுகள் போக 1 கோடியே 80 லட்சத்து 54 ஆயிரம் வெள்ளி பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் அடிப்படையில் இந்த அடைவு நிலை பதிவு செய்யப்பட்டதாக டத்தோ பண்டார் முகமது அஸஹான்  முகமது அரிப் கூறினார்.

அந்த உத்தேச வரவு செலவுத் திட்டத்தில்  வருமானம் 35 கோடியே 59 லட்சத்து 41 ஆயிரம் வெள்ளியாக இருக்கும் என்றும் செலவைப் பொறுத்த வரை நிர்வாக செலவினங்களுக்கு 26 கோடியே 80 லட்சத்து 73 ஆயிரம் வெள்ளியும் மேம்பாட்டிற்கு 6 கோடியே 66 லட்சத்து 34 ஆயிரம் வெள்ளியும் செலவிடப்படும் என்றும் கணிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் நிதி நிலை வலுவானதாகவும் நிலையானதாகவும் இருப்பதோடு கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தை  எதிர்கொள்ளும் வல்லமையையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநகர் மன்றம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் திட்டங்கள் மற்றும் வியூங்களின் வாயிலாக இந்த நேர் மறையான நிதி நிலை இவ்வாண்டு  முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் தலைமையகத்தில் மாநகர் மன்றத்தின் முழு அளவிலான  கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 


Pengarang :