ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பெருநாளின் போது நெரிசலைத் தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் பயணத்தை மேற்கொள்வீர்

கோலாலம்பூர், ஜன 26- பெருநாளின் போது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் பரிந்ரைத்துள்ள நேர வழிகாட்டியைப் பின்பற்றி பயணத்தை மேற்கொள்ளும்ப வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை 14 லட்சத்திலிருந்து 16 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிளஸ் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி டத்தோ ஜக்காரியா அகமது ஜாஹிடி கூறினார்.

வடக்கு நோக்கி குறிப்பாக பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் போன்ற மாநிலங்களுக்குச் செல்ல விரும்புவோர் காலை 10.00 மணிக்கு முன்னதாக நெடுஞ்சாலைக்குள் நுழைந்து விடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

ஜோகூர் மாநிலம் வரையிலான தென் பகுதிக்கு பயணம் மேற்கொள்வோருக்கும் இந்த விதிமுறை பொருந்தும். கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள மாநிலங்களுக்குச் செல்வோர் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நெடுஞ்சாலையில் நுழைவது உசிதமாக இருக்கும் என்றார் அவர்.

அதே சமயம், பெர்லிஸ், பினாங்கு, வட பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வர விரும்வோர் காலை 9.00 மணிக்கு முன்னதாக தங்கள் பயணத்தை தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த பயண நேர பரிந்துரை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வெடுக்கும் மையங்களுக்குச் செல்வோர் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :