ECONOMYMEDIA STATEMENTSELANGOR

இலவச சிம்  கார்டு விநியோகத் திட்டம் இவ்வாண்டும் தொடரப்படும்- 25,000 பேர் இலக்கு

காஜாங், ஜன 31- சிலாங்கூர் மாநில இலவச இணைய தரவு சேவைத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 25,000 பேருக்கு சிம் கார்டுகளை வழங்க எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர், இணையம் வாயிலாக வர்த்தகம் புரிவோர் மற்றும் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இலவச சிம் கார்டுகளை வழங்கப்படும் என்று எம்.பி.ஐ. தலைமை செயல்முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.

கடந்தாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைத்த தைத் தொடர்ந்து இவ்வாண்டிலும் அது தொடரப்படும். இணைய சேவை அன்றாட வாழ்வில் அதிக முக்கிய அங்கமாக விளங்குவதால் இதற்கான தேவை அதிகம் உள்ள தரப்பினருக்கு உதவுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் செசெப்பான் பத்து மினாங்கபாவ் சமூக மண்டபத்தில் எம்.பி.ஐ. ஏற்பாட்டில் நடைபெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 70,000 பேருக்கு இலவச இணைய தரவு சேவை வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச இணைய தரவு சேவையை வழங்கும் இத்திட்டத்திற்கு 1 கோடியே 75 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

 


Pengarang :