ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒமிக்ரோன் தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள நாடு மலேசியா தயார்- கைரி கூறுகிறார்

கோலாலம்பூர், பிப் 2– ஒமிக்ரோன் வகை கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள மலேசியா தயார்  நிலையில் உள்ளதோடு எளிதில் நோய்த் தொற்று பீடிக்கக்கூடிய தரப்பினரை பாதுகாப்பதில் பரந்த அனுபவத்தையும் அது கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுடின் கூறினார்.

கடந்தாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இருந்ததைப் போன்ற நிலை தற்போது இல்லை எனக் கூறிய அவர், பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட அமலாக்கம் காரணமாக நாடு கூடுதல் தயார் நிலையில் உள்ளது என்றார்.

மற்ற இடங்களைப் போல் இங்கு ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்ற கடந்த மாதம் நான் கூறியிருந்தேன். அவ்வாறு நிகழும் பட்சத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும்  அதிகரிக்கும். இதனைத் கருத்தில் கொண்டு ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தை நாம் விரைவுபடுத்தினோம் என அவர் குறிப்பிட்டார்.

முன்பு கணிக்கப்பட்டதைப் போல் நோய்த் தொற்று விரைவாக பரவினாலும் அது குறித்து நாம் கலக்கமடைய வேண்டியதில்லை என கைரி கூறினார்.

பெரியவர்கள் மற்றும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டம் தவிர்த்து 5 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் இயக்கம் சீராக நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்றினால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக தனிமைப்படுத்தும் காலக்கட்டத்தை நாம் குறைத்துள்ளதோடு பாதிப்பையும் குறைந்த பட்ச அளவுக்கு கட்டுப்படுத்தியுளோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :