ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சுய விருப்பத்தின் பேரில் சிறார்களுக்கு தடுப்பூசியை மறுப்பவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படாது

கோலாலம்பூர், பிப் 3– சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் (பிக்கிட்ஸ்) வழங்கப்படும் தடுப்பூசி சுய விருப்பத்தின் அடிப்படையிலானது. தடுப்பூசி பெறாத சிறார்களுக்கு எந்த கட்டுப்பாடும்  விதிக்கப்படாது.

பெற்றோர்கள் மத்தியில் தடுப்பூசி மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

 பிக்கிட்ஸ் திட்டத்தின் கீழ் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் பல பெற்றோர்கள் பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கையாள்வதை தாங்கள் உணர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.

நேற்று வரை 15 விழுக்காட்டுச் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சரியான முடிவை எடுக்க பெற்றோர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கும் நோக்கில் இத்திட்டம் சுய விருப்ப அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பல பெற்றோர்கள் அச்சம் கொண்டிருப்பதை உணர முடிகிறது. இருந்தாலும் பாதகமில்லை. ஆகக் கடைசி நிலவரங்களை அவர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருவோம் என்றார் அவர்.

இங்குள்ள துங்கு அஜிசா மருத்துவமனையில் பிக்கிட்ஸ் தடுப்பூசித் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :