ECONOMYHEALTHMEDIA STATEMENTSELANGOR

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் 74,000 பேர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், பிப் 3– சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 74,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு மக்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வரும் நிலையில் மாநிலத்திலுள்ள 17 செல்கேர் கிளினிக்குகளுக்கு தினசரி 1,950 தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக கிளினிக் செல்கேர் தலைமை நிர்வாகி டாக்டர் ஜீவராஜா ரத்னராஜா கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் இத்தகைய ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்வதை தாங்கள் பெரிதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மாநில அரசு 157,000 தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டோர் இந்த ஊக்கத் தடுப்பூசியைப் பெறலாம்.

மாநிலத்திலுள்ள செல்கேர் கிளினிக்குகளின் பட்டியலை https://selcareclinic.com/our-clinics/  என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது செலங்கா செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

சிலாங்கூரில் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில் மாநில அரசு செல்வேக்ஸ் கம்யூனிட்டி மற்றும் செல்வேக்ஸ் இண்டஸ்ட்ரிஸ் திட்டங்களை கடந்தாண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி அமல்படுத்தியது.


Pengarang :