ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 40,000 மாணவர்களுக்கு 100 வெள்ளி பற்றுச் சீட்டு

ஷா ஆலம், பிப் 3- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 40,000 மாணவர்களுக்கு மாநில அரசு உதவிப் பொருள்களை வழங்கவுள்ளது.

அம்மாணவர்களுக்கு 100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டு இம்மாதம் மூன்றாம் வாரம் தொடங்கி கட்டங் கட்டமாக விநியோகிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பற்றுச் சீட்டைக் கொண்டு ஆரம்ப, இடைநிலை மற்றும் சிலாங்கூர் சமய இலாகா பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான பள்ளிச் சீருடைகள், காலணி, காலுறை போன்ற பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் அந்த  இம்மாதம் 18 ஆம் தேதி முதல் மாத இறுதி வரையிலான காலக்கட்டத்தில் அப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். அந்த பொருள் விநியோக மையங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றார் அவர்.

இங்குள்ள பொருளாதார நடவடிக்கை மன்ற கூட்ட அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். 

இப்போது தாங்கள் மாவட்ட கல்வி இலாகா மற்றும் தொகுதி சேவை மையங்கள் வாயிலாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி பெய்த அடைமழை காரணமாக சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமயான வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில்  மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.


Pengarang :