ECONOMYMEDIA STATEMENTNATIONAL

1,243 உதவி மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்க சுகாதார அமைச்சு இணக்கம்

கோலாலம்பூர், பிப் 4- இவ்வாண்டு காலாவதியாகும் 1,243 சுகாதாரப் பணியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்க சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 2 ஆம் தேதியுடன் காலாவதியான சுகாதார அமைச்சின் பயிற்சிக் கழக பட்டதாரிகளை உட்படுத்திய கிரேட் யு29 தகுதி கொண்ட 1,243 உதவி மருத்துவ அதிகாரிகளின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கடந்த மாதம் 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் சேவை ஆணையம் முடிவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது சடிக் அப்துல்லா கூறினார்.

இந்த ஒப்பந்தம் நீட்டிப்பு தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது. 2022 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் காலாவதியாகும் இதரத் துறை சார்ந்தவர்களுக்கான ஒப்பந்த நீட்டிப்பு கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு பெருந்தொற்று கட்டத்திலிருந்து எண்டமிக் கட்டத்திற்கு மாறுவது மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக தாமதமடைந்த சேவைத் துறையை மீட்சியுறச் செய்வது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்த நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :