ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜோகூர் தேர்தல்- எதிர்க்கட்சிகளுக்கு நெருக்குதல் தர எஸ்.ஒ.பி.யை பயன்படுத்தாதீர்- அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், பிப் 7- ஜோகூர் மாநிலத் தேர்தலில் கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) தேவை. எனினும் அந்த நடைமுறை அமலாக்கம் எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பினால் அச்சம் எழுந்துள்ளதை ஒப்புக் கொண்ட அவர், எனினும், எதிர்க்கட்சிகளுக்கு நெருக்குதல் தருவதற்கு இந்த எஸ்.ஒ.பி. விதிகளை மத்திய அரசு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

அவர்கள்தான் தேர்தல் வேண்டும் என்றார்கள். பிறகு அவர்களே எஸ்.ஒ.பி. விதிகளை கடுமையாக்குகிறார்கள். அரசாங்கத் தரப்பினர் ஊடகங்கள் வழி பிரசாரம் செய்ய முடியும். ஆனால் நாங்கள் காப்பிக் கடைகளைத்தான் நாட வேண்டியுள்ளது. இது என்ன நியாயம்? என அவர் கேள்வியெழுப்பினார்.

எங்களுக்கு நெருக்குதல் தர எஸ்.ஒ.பி. விதிகளைப் பயன்படுத்த வேண்டாம். மலாக்கா தேர்தலில் செய்ததைப் போல் நிபந்தனைகளுடன் பிரசார வாய்ப்பை தர வேண்டாம் என்றார் அவர்.

மண்டபம் அல்லது திடல்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொது மக்களுக்கு மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி தரலாம் என்று  பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவருமான அவர் ஆலோசனை கூறினார்.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜோகூர் மாநில தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 9,117 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 10,089 ஆக உயர்வு கண்டது.

இந்த எண்ணிக்கை விரைவில் 15,000 ஆக உயரும் சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று கூறியிருந்தார்.


Pengarang :