ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

80 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றால் ஒமிக்ரோன் பரவல் முடிவுக்கு வரும் – நிபுணர் கருத்து

ஷா ஆலம், பிப் 7– நாட்டில் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்கள் எண்ணிக்கை 80 விழுக்காட்டை எட்டினால் ஒமிக்ரோன் நோய்த் தொற்று அலை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.

நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், தீவிர சிகிச்சைப் பெறுவோர் மற்றும் மரணமடைவோர் எண்ணிக்கையை ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அவாங் புல்கிபா அவாங் மாமுட் கூறினார்.

நாம் இப்போது புதிய நோய்த் தொற்று எண்ணிக்கை மீது அல்லாமல் கடுமையான பாதிப்பைக் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோர் மற்றும் மரண எண்ணிக்கை மீதுதான் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.

பிப்ரவரி மாத இறுதிக்குள் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்த பட்சத்தை எட்டும் பட்சத்தில் மேற்கண்ட நான்கு அளவீடுகளும் புதிய நோய்த் தொற்றுக்கு இணையாக இருக்காது என்பதோடு ஒமிக்ரோன் திரிவு பரவலும் விரைவில் முடிவுக்கு வரும் என்றார் அவர்.

நாட்டு மக்கள் உயர்ந்த பட்ச நோய்த் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக ஊக்கத் தடுப்பூசி பெறுவோரின் தினசரி எண்ணிக்கையை  360,000 ஆக உயர்த்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி மற்றும் ஊக்கத் தடுப்பூசியின் ஆக்கத் தன்மை குறித்து அரசாங்கம் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை தர வேண்டும். ஏனென்றால் தற்போது தரப்படும் விளக்கம் மக்களுக்கு அவ்வளவு நம்பிக்கைத் தருவதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :