ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உடல் உறுப்புகளுக்காக சிறார்களைக் கடத்தும் கும்பல் குறித்து எச்சரிக்கையா? போலீஸ் மறுப்பு 

கோலாலம்பூர், பிப் 7– உடல் உறுப்புகளுக்காக 15 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களை கடத்தி விற்கும் கும்பலுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி மலேசியர்களுக்கு தாங்கள் எச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த தகவலை அரச மலேசிய போலீஸ் படை மறுத்துள்ளது.

கடத்தல் நடவடிக்கைக்காக அக்கும்பல் புரோட்டோன் வீரா கார் மற்றும் வெள்ளை நிற வேனை பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் வெளி வந்த அந்த தகவல் 2016 முதல் பரப்பப்பட்டு வருவதோடு அது தற்போது மீண்டும் பகிரப்படுகிறது என்று அரச மலேசிய போலீஸ் படையின் வர்த்தகத் தொடர்புப் பிரிவுத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ஏ.ஸ்கந்தகுரு  கூறினார்.

சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை போல் கடத்தல் மற்றும் உடல் உறுப்பு விற்பனை தொடர்பில் போலீசார் இதுவரை எந்த புகாரையும் பெறவில்லை என்று இவர் தெளிவுபடுத்தினார்.

அதே சமயம், இச்சம்பவம் தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

சமூக ஊடகங்களில் கூறப்படுவதைப் போல் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை பிரிவின் வழி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றார் அவர்.

அந்த சமூக ஊடகத் தகவலில் மனிதர்களின் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகளுக்கான விலையும் குறிப்பிட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பொதுமக்கள் நம்பக் கூடாது என்பதோடு அதனை பரப்பவோ பிறருடன் பகிரவோ கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Pengarang :