ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி- 45 நிமிடங்களில் 50 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

ஸ்ரீ கெம்பாங்கான், பிப் 7– இங்குள்ள சிலாங்கூர் மொத்த விலைச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட கிலோ 8.00 வெள்ளி விலையில் கோழி விற்கும் திட்டத்திற்கு சிறப்பான ஆதரவு கிடைத்துள்ளது. இந்த விற்பனை ஆரம்பிக்கப்பட்ட 45 நிமிடங்களில் 50 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

இத்திட்டத்திற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று நோரிசா முகமது நோர் (வயது 50) கூறினார். இந்த மலிவு விற்பனைத் திட்டம் நீட்டிக்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்பு நிர்ணயிக்கப்பட்டதை விட மிகவும் குறைவான விலையில் கோழி விற்கப்படுவது சிறப்பான நடவடிக்கையாகும். இத்திட்டத்தை மாநில அரசு நீடித்தால் எங்களுக்கும் அந்த உணவுப் பொருளை விற்பது எளிதாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருளுக்கு தேவை அதிகம் இருக்கும் காரணத்தால் விநியோகத்தை அதிகரிக்கும்படி அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதிகமான கோழிகளை விற்பது வணிகர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.

ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தையில் நடைபெற்ற மலிவு விலையில் கோழி விற்பனைத் திட்டத்திற்கான வரவேற்பு தொடர்பில் சிலாங்கூர் கினி மேற்கொண்ட ஆய்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு கோழி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தாம் மாநில அரசின் கோழி விற்பனைத் திட்டத்தில் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும் என்று பஸ்ருள் ஹஷிம் (வயது 35) கூறினார்.

இந்த திட்டம் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நன்மை தருகிறது. எனினும், கோழி விநியோகத்தில் காணப்படும் பிரச்சனையை அரசு தீர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர்  குறிப்பிட்டார்.


Pengarang :