ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாரா அலுவலகங்களில் எஸ்.பி.ஆர்.எம். அதிரடிச் சோதனை

கோலாலம்பூர் பிப் 7- மாரா எனப்படும் மக்கள் அறங்காப்பு நிதி வாரிய உயர் அதிகாரிகளுக்கு எதிராக உயர்நெறி குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) அதன் பல அலுவலங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டது.

தலைநகரிலுள்ள மாரா தலைமையகம், மாரா கார்ப்ரேஷன் அலுவலகம் மற்றும் நிறுவனச் செயலாளர் அலுவலகம் ஆகியவற்றில் 11 அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை 10.30 மணி முதல் சோதனையில் ஈடுபட்டதாக எஸ்.பி.ஆர்.எம். வட்டாரம் கூறியது.

சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த அந்த நிதி வாரியத்தின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களைத் திரட்டுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அறியப்படுகிறது.

மாரா உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உயர் நெறி குற்றச்சாட்டு தொடர்பில் தமது தரப்பு புகாரைப் பெற்றுள்ளதோடு அது குறித்து விரிவான விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக எஸ்.பி.ஆர்.எம். கடந்த சனிக்கிழமை கூறியிருந்தது.

இந்த புகாரை தாங்கள் கடுமையாக கருதுவதோடு திங்கள் கிழமை தொடங்கும் விசாரணையில் மாரா கார்ப்ரேஷன் நிறுவன சாட்சிகளிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் எனவும் அது தெரிவித்தது.


Pengarang :