ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2021 ஆம்  ஆண்டிற்கான சிலாங்கூர் வேளாண் சாதனையாளர்களாக மூவர் தேர்வு

ஷா ஆலம், பிப் 8– இங்கு நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த வேளாண் சாதனையாளர் விருதை மூவர் தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான இதர ஐந்து போட்டியாளர்களைத் தோற்கடித்து இந்த வெற்றிக் கிண்ணத்தை இம்மூவரும் கைப்பற்றினர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் இப்போட்டியில் மொத்தம் 19 விவசாயத் துறையினர் பங்கேற்றனர்.

இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சித்தி நுருள் அய்ஷா ஜக்காரியா, டிராகன் ஃப்ரூட் எனப்படும் அகிலப்பழ பயிரீட்டாளரான சாம் சியா மற்றும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பெகி செங் ஆகியோரே அந்த சாதனை விருதைப் பெற்ற அந்த மூவராவர்.

இம்மூன்று வெற்றியாளர்களுக்கும் 10,000 வெள்ளி மதிப்பிலான ரொக்கம் மற்றும் விவசாய உதவிப் பொருள், வெற்றியாளர் கிண்ணம் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எடுத்து வழங்கினார்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஐந்து போட்டியாளர்கள் ஆறுதல் பரிசாக 500 வெள்ளி ரொக்கம், நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழைப் பெற்றனர்.

இந்த விருதளிப்பு நிகழ்வு இங்குள்ள சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழக தலைமையகத்தின் ஆர்க்கிட் மண்டபத்தில் நடைபெற்றது.

விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி அளவு ஆகியவற்றுக்கு 70 புள்ளிகள் வழங்கப்பட்ட வேளையில் யூடியூப் வாயிலாக பொது மக்களிடமிருந்து எஞ்சிய வாக்குகளும் பெறப்பட்டன.


Pengarang :