ECONOMYMEDIA STATEMENTSELANGOR

போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ் விற்பனை- ஷா ஆலமில் நால்வர் கைது

ஷா ஆலம், பிப் 9– ஷா ஆலம் வட்டாரத்தில் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் இரு ஆடவர்கள் மற்றும் இரு பெண்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இங்குள்ள செக்சன் 17, ஜாலான் காலோய் 17/17 எனும் முகவரியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் அச்சடிக்கப்பட்ட போலி மருத்துவ  விடுப்புச் சான்றிதழ்கள், மற்றும் அவற்றை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளை போலீசார் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பொருள்களில் 62 போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்கள், ஐந்து கைப்பேசிகள், ஒரு கணினி, ஒரு பிரிண்டர் இயந்திரம், இரு ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவையும் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி அஸ்மான் அலி கூறினார்.

கைது செய்யப்பட்ட 22 முதல் 35 வயது வரையிலான அந்நால்வரும் விசாரணைக்காக இம்மாதம் 11 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

போலி ஆவணங்களை உண்மையானவை என நம்ப வைத்தது தொடர்பில் அந்நால்வர் மீதும் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு ஓராண்டிற்கும் குறையாத அல்லது பத்தாண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டம் வகை செய்கிறது.


Pengarang :