ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு உதவித் தொகை – அமைச்சரவை ஒப்புதல்

கோலாலம்பூர், பிப் 10– கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு 60 காசை உதவித் தொகையாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உதவித் தொகையை வழங்குவதில் பண்ணை நிலையிலான விலையான கிலோவுக்கு வெ.5.90 மற்றும்  சில்லறை விலையான வெ. 8.90 ஆகியவற்றை அது கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

அனைத்து தர அளவிலான முட்டைகளுக்கும் தலா 5 காசை உதவித் தொகையாக வழங்கவும் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரோன்ல்டு கியாண்டே கூறினார்.

இந்த உதவித் தொகை சலுகை பிப்ரவரி 5 முதல் ஜூன் 4 வரை அதாவது மலேசிய குடும்ப உச்ச வரம்பு விலைக் கட்டுப்பாட்டு திட்ட அமலாக்க காலம் வரை நடைமுறையில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

செலவின அதிகரிப்பு குறிப்பாக உற்பத்தி செலவில் 70 விழுக்காட்டை விழுங்கக்கூடிய தீவினம், போக்குவரத்து, ஊதியம், நீர், மின்சார கட்டணம், மருந்து ஆகிய செலவினங்கள் அதிகரித்ததால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கி வரும் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

உதவித் தொகையை வழங்குவதன் வாயிலாக இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையிட்டதால் அந்த உணவுப் பொருள்களின் விநியோகம் சீரடைவதற்கும் பொது மக்கள் நியாயமான விலையில் கோழி மற்றும் முட்டையை வாங்குவதற்கும் வழி ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நான்கு மாத காலத்திற்கு கோழி மற்றும் முட்டைக்கு உதவித் தொகை வழங்குவதால் அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய நிதித் தாக்கம் 52 கோடியே 85 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :