ECONOMYMEDIA STATEMENTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவ  20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

கிள்ளான், பிப் 10– சிலாங்கூரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவ மாநில அரசு 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த சிறு தொழில்முனைவோர் மானிய நிதித் திட்டத்திற்கு மாவட்ட அலுவலங்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை இலக்காக கொண்ட இந்த உதவித் திட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியை மாநில அரசு யுபென் எனப்படும் பொருளாதார திட்டமிடல் பிரிவின் வாயிலாக மேற்கொண்டு வருகிறது. இந்நோக்கத்திற்காக நாம் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றார் அவர்.

இந்த திட்டத்திற்கு 100 முதல் 200 வணிகர்கள் விண்ணப்பம் செய்வர் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பம் செய்வோர் சிறு வணிகர்களாகவும் வருடாந்திர வர்த்தகம் 300,000 லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாமலும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்று அவர் சொன்னார்.

சித்தம் எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள புக்கிட் திங்கியில் நடைபெற்ற வர்த்தக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு உதவும் நோக்கில் இந்த சிறு தொழில்முனைவோர் மானிய நிதித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது அது வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்று ரோட்சியா சொன்னார்.


Pengarang :