ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மக்களின் புகார்களைக் கையாள கண்காணிப்புக் குழு- ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைக்கிறது

ஷா ஆலம், பிப் 10- தனது நிர்வாகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்ய கண்காணிப்பு குழுவை ஷா ஆலம் மாநகர் மன்றம் அமைக்கிறது.

பல்வேறு துறைகள், பிரிவுகள், கிளை அலுவலங்களில் உள்ள பணியாளர்களை உள்ளடக்கிய 112 பேர் கொண்ட இந்த குழு மாநகர் மன்றத்தின் அனைத்து 51 பிரிவுகளையும் கண்காணிக்கும்.

இந்நோக்கத்திற்காக தலா நான்கு உறுப்பினர்கள் கொண்ட 28 குழுக்கள் அமைக்கபடும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவுத் தலைவர்  ஷாரின் அகமது கூறினார்.

இக்குழுவினர் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியும் பணியில் ஈடுபடுவர் என்பதோடு பொது மக்கள் தெரிவிக்கும் புகார்களையும் கவனிப்பர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த குழுக்கள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. செக்சன் 1 முதல் 24 வரையிலான மத்திய மண்டலத்தில் 12 குழுக்களும் செக்சன் யு1 முதல் செக்சன் யு20 வரையிலான வட மண்டலத்தில் 10 குழுக்களும் செக்சன் 25 முதல் செக்சன் 36 வரையிலான தென் மண்டலத்தில் 6 குழுக்களும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.

தொடக்க கட்டமாக, இக்குழுக்கள் புகார்களைக் கவனிக்கும் அதே வேளையில் அதிகமாக புகார் வரக்கூடிய குப்பை, விளக்கு, மரங்கள், சாலை மற்றும் சாலை அறிவிப்பு பலகை தொடர்பான புகார்களில் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

புகார்களைத் தெரிவிக்க விரும்பும் பொது மக்கள் 1-800-88-4477 என்ற கட்டணமில்லா எண்களில் அல்லது www.aduan.mbsa.gov.my எனும் அகப்பக்கத்தை அல்லது I-adu எனும் செயலியை தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :