ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்த இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி

கோலாலம்பூர், பிப் 11 – அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கு கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசிக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நேற்று  நடைபெற்ற 369 ஆவது மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார மன்றக்  கூட்டத்தில் அந்த தடுப்பூசிக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்

எனினும், இந்த ஒப்புதலைப் பெறுவதற்கு தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய தகவல் கண்காணிப்பு தொடர்ந்து தேவைப்படுவதோடு  சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தொடர்ச்சியான மதிப்பீடும் அவசியமாகிறது என்று அவர் கூறினார்.

தடுப்பூசியின் நன்மை  மற்றும் தீமைக்கான சமநிலை போக்கு தொடர்ந்து நேர்மறையாக இருப்பதை உறுதி செய்வதற்கு இந்த கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று அவர்  ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி மலேசியாவில்  எவேரோஸ் பர்மாசுயூட்டிக்கல் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில் சார்ஸ்-கோவி-2 வைரசால் ஏற்படக்கூடிய கோவிட்-19 நோய்த் தொற்றைப் தடுக்க இந்த தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்று நோர் ஹிஷாம் கூறினார்.


Pengarang :