ECONOMYHEALTHNATIONALPBT

சிறார்களுக்கான தடுப்பூசி மையங்களாக 1,055 பள்ளிகள் தேர்வு

கோலாலம்பூர், பிப் 11- “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்ட மையங்களாகச் செயல்படக்கூடிய 1,055 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பள்ளிகள் வரும் திங்கள்கிழமை தொடங்கி செயல்படும்.

எனினும், தடுப்பூசி மையங்களாக செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரிக்கப்படும் என்று சுகாதார துணையமைச்சர் 1 டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

இப்பள்ளிகள் யாவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த பள்ளிகளைப் பொறுத்த வரை தடுப்பூசி பெறும் மாணவர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகள் தயார் செய்யும். தடுப்பூசியைச் செலுத்தும் பணியை அரசாங்க மருத்துவக் குழுவினர் அல்லது தனியார் மருத்துவர்கள் மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறார்கள் தடுப்பூசிக்கான முன்பதிவை பெறுவதற்கு ஏதுவாக தங்கள் பொறுப்பில் பிள்ளைகளின் தகவல்களை மைசெஜாத்ரா செயலியில் பதிவிடும்படி அவர்களின் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள அவர் கேட்டுக் கொண்டார்.

மைசெஜாத்ரா வசதி இல்லாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நேரம் மற்றும் இடம் குறித்த தகவல்களை பள்ளி நிர்வாகத்தினர் வழங்குவர் என்று சிறார் கோவிட்-19 தடுப்பூசி திட்ட நடவடிக்கை குழுவின் தலைவருமானஅவர் தெரிவித்தார்.

 


Pengarang :