ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

எண்டமிக் கட்டத்தை அறிவிக்கும் விஷயத்தில் அரசாங்கம் கவனப்போக்கை கடைபிடிக்கிறது

கோலாலம்பூர், பிப் 11- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றை பெண்டமிக் கட்டத்திலிருந்து எண்டமிக் கட்டத்திற்கு மாற்றும் விஷயத்தில் அரசாங்கம் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இவ்விவகாரத்தில் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று குறிப்பாக, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போதைக்கு அபரிமித உயர்வைக் காணவில்லை. சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக அவர்கள் முன்னதாகவே பிரகடனப்படுத்தி விட்டனர். குறிப்பாக, டென்மார்க்கில் கோவிட்-19 நோய்த் தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்து விட்டப் பின்னர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் உயர்வு கண்டது என்றார் அவர்.

ஆகவே, இவ்விவகாரத்தில் நானும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவும் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கிறோம். எங்களின் இந்த அணுகுமுறை பிற்போக்குத்தனமானது என சிலர் கூறுகின்றனர். பிறகு வருத்தப்படுவதை விட இப்போது முதலே பாதுகாப்பாக இருப்பது நல்லது என  கைரி தெரிவித்தார்.

இங்குள்ள செலாயாங் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :