MEDIA STATEMENTNATIONALSUKANKINI

ஆசிய பூப்பந்து போட்டி- தரமிக்க விளையாட்டுகளை நடத்துவதில் சிலாங்கூர் அரசின் ஆற்றல் நிரூபணம்

சுபாங் ஜெயா, பிப் 15– நாட்டில் விளையாட்டுத் திட்டங்களை மேம்படுத்துவதில் மாநில அரசுக்கு உள்ள ஆற்றலை நிரூபிக்கக்கூடிய அடையாளமாகவும் அளவு கோலாகவும் 2022 ஆசிய குழு நிலையிலான வெற்றியாளர் கிண்ண பூப்பந்து போட்டி விளங்குகிறது.

தரமிக்க விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதிலும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அதனை வெற்றிகரமாக நடத்துவதிலும் மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எப்போதும் சிறந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற மாநில அரசின் நிலைப்பாட்டை இந்த ஆசிய பூப்பந்து போட்டி நிரூபித்துள்ளது. இந்த பூப்பந்து ஆட்டங்கள் கடுமையாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். காரணம், இப்போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வாகும் நான்கு குழுக்கள் வரும் மே மாதம் தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடைபெறும் தாமஸ் மற்றும் உபர் கிண்ண போட்டிகளுக்கு இயல்பாக நுழைவதற்குரிய வாய்ப்பினைப் பெறும் என்றார் அவர்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலின் எதிரொலியாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு  நடவடிக்கைகள் காரணமாக இந்த பூப்பந்து போட்டியில் பல நாடுகள் பங்கேற்க இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த போட்டியின் போது எஸ்.ஒ.பி. விதிகளை முறையாகப் பின்பற்றும்படி விளையாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அமிருடின் கேட்டுக் கொண்டார்.

ஷா ஆலம், செத்தியா சிட்டி மாநாட்டு  மையத்தில் இன்று தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெறும் இந்த போட்டிக்கு சிலாங்கூர் மாநில அரசும் எம்.பி.ஐ.எனப்படும் மந்திரி புசார் கழகம் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களும் ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளன.


Pengarang :