ECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

மிட்லண்ட்ஸ் பள்ளியில் மாணவர்களை அதிகரிக்க நடவடிக்கை- முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு சலுகைகள்

ஷா ஆலம், பிப் 15–  இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மிட்லண்ட்ஸ் பள்ளி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்  இளங்கோவன் முனியாண்டி

இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, காலணி, புத்தகப் பை, நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் இலவசமாக வழங்கப்படுவதோடு பெ.ஆ.சங்க கட்டணம் செலுத்துவதிலிருந்தும் அவர்களுக்கு விலக்களிக்கப்படுகிறது என்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்  இளங்கோவன் முனியாண்டி கூறினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய ஐந்து நட்சத்திர தரம் கொண்ட மாநாட்டு மையம், நவீன தொழில்நுட்ப கற்றல் கற்பித்தல் வசதிகள், புறப்பாட நடவடிக்கைகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற நாட்டின் தலைசிறந்த தமிழ்ப்பள்ளி என்ற பெருமையை இப்பள்ளி தக்க வைப்பதற்கு ஏதுவாக மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தாங்கள் தீவிரம் காட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது 155 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்களை பெற்றோர் ஆசிரியர் சங்கம் வாயிலாக மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி உபகரணங்களை வழங்குவது போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தவிர்த்து சுற்று வட்டாரங்களில் மாணவர் சேர்ப்பு தொடர்பான பதாகைகளைப் பொருத்துவது ஆகியவையும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்றார் அவர்.

கடந்தாண்டு முதலாம் ஆண்டில் 35 மாணவர்கள் சேர்ந்தனர். இவ்வாண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி புதிய பள்ளித் தவணை தொடங்கவுள்ள நிலையில் இது வரை 22 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பள்ளி தொடங்குவதற்குள் இந்த எண்ணிக்கையை 30 முதல் 40 ஆக அதிகரிக்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பள்ளியின் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மற்றும் இப்பள்ளிக்கு பொது போக்குவரத்து வசதி இல்லாதது போன்றவை மாணவர் எண்ணிக்கை சரிவுக்கு காரணமாக விளங்குவதாகக் கூறிய அவர், போக்குவரத்து பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக வேன் மூலம் மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கும் முயற்சியில் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

இப்பள்ளியில் உள்ள பாலர் பள்ளியில்  தற்போது 15 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் இப்பள்ளியை கல்வியமைச்சின் உதவியுடன் நடத்துவதற்கான முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதன் வழி அடுத்தாண்டு மார்ச் மாதவாக்கில் இப்பள்ளி  கல்வியமைச்சு ஏற்று நடத்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கையிலும்  தலைசிறந்து விளங்கி வருகின்றனர். அனைத்துலக நிலையிலான சதுரங்கம் மற்றும் அறிவியல் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக காலப்போக்கி அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்பதே எங்களின் கவலையாகும். ஷா ஆலம் வட்டார இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்புவதை உறுதி செய்வதில் தமிழ் ஆர்வலர்களும் சமூகப் பற்றாளர்களும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.


Pengarang :