ANTARABANGSAMEDIA STATEMENTSUKANKINI

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதன்மை ஆட்டக்காரராக களமிறங்கத் தயார்- சித்தி நோர்சுஹைனி கூறுகிறார்

ஷா ஆலம், பிப் 16– இன்று மாலை நடைபெறவிருக்கும் ஆசிய பூப்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் முன்னணி விளையாட்டாளராக களமிறங்கத் தாம் தயாராக  உள்ளதாக மலேசிய பூப்பந்து வீராங்கனையான சித்தி நோர்சுஹைனி அஸ்மான் கூறினார்.

நேற்றைய ஆட்டத்தில் ஜப்பானிய ஆட்டக்காரர் ஹினா அக்கேச்சியை 21-16, 21-20 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது போல் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த தாம் தயாராக உள்ளதாக 18 வயதே நிரம்பிய மூன்றாவது ஒற்றையர் ஆட்டக்காரரான அவர் தெரிவித்தார்.

நான் முன்னணி ஆட்டக்காரராக களமிறக்கப்படும் பட்சத்தில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை திறம்பட நிறைவேற்றுவேன் என்றார் அவர்.

இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டம் நேற்று நடைபெற்ற ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தை விட எளிதாக இருக்கும் எனக் கருதுகிறேன். களத்தில் தொடர்ந்து தாக்குப் பிடிப்பதற்கும் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்துவதற்கும் ஏதுவாக ஆட்ட பாணியை மாற்ற வேண்டியுள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

தமக்கு முன்னால் ஆடிய நாட்டின் இரு மகளிர் ஒற்றையர் ஆட்டக்காரர்களும் தோல்வியைத் தழுவியதால் நேற்றைய ஆட்டத்தின் போது தாம் சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கியதாக உலகின் 311 வது நிலை ஆட்டக்காரரான சித்தி குறிப்பிட்டார்.


Pengarang :