ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் அரசின் மலிவு விலைத் திட்டத்தின் கீழ் பிப். 7 முதல் 3,679 கோழிகள் விற்கப்பட்டன

ஷா ஆலம், பிப் 16– சிலாங்கூர் அரசின் விலைக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3,679 கோழிகள் கிலோ 8.00 வெள்ளி விலையில் விற்கப்பட்டுள்ளன.

அத்திட்டத்தின் கீழ் கோழி மற்றும் முட்டைகளை மலிவு விலையில் விற்கும் நடவடிக்கை இம்மாதம் 7 ஆம் தேதி தொடங்கியது முதல் இதுவரை 148 தட்டு முட்டைகளும் விற்கப்பட்டுள்ளதாக பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

இரு முக்கிய இடங்களான  ஸ்ரீ  கெம்பாங்கான் மொத்த விலைச் சந்தை,  ஷா ஆலம் செக்சன் 14 இல் உள்ள பி.கே.பி.எஸ். தலைமையகம் மற்றும் லோரி ஏசான் மூலம் தினசரி பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையின் மூலம் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக அது தெரிவித்தது.

லோரி ஏசான் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் விற்பனையின் மூலம் தினசரி சராசரி 5,000 வெள்ளி வரை அந்த உணவுப் பொருள்கள் விற்கப்பட்டன.

பொருள் விலையேற்றம் காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு நடுத்தர கோழியை கிலோ 8.00 வெள்ளி விலையில் சிலாங்கூர் அரசு விற்பனை செய்து வருகிறது.

இத்திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் பத்து லட்சம் வெள்ளி செலவில் 50,000 கோழிகளுடன் இத்திட்டம் மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.


Pengarang :