ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பெற்ற சிறார்களில் எண்மருக்கு மட்டுமே லேசான பக்க விளைவு

கோத்தா பாரு, பிப் 16- சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் (பிக்கிட்ஸ்) இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கியது முதல் தடுப்பூசிக்கு பிந்தைய விளைவுகள் மீதான (ஏ.இ.எப்.ஐ.) எட்டு அறிக்கைகளை மட்டுமே சுகாதார அமைச்சு பெற்றுள்ளது.

தடுப்பூசிப் பெற்ற பிறகு தோள்பட்டை வீக்கம் உள்ளிட்ட லேசான அறிகுறிகளை மட்டுமே அவை கொண்டிருந்ததாக சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

நேற்று வரை தடுப்பூசியை பெற்ற 5 முதல் 11 வயது வரையிலான 246,868 சிறார்களில் 0.006 விழுக்காட்டை மட்டுமே இந்த எண்ணிக்கை பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

ஏ.இ.எப்.ஐ. அறிக்கை தேசிய மருந்தக ஒழுங்கு முறை பிரிவுக்கு கிடைத்தவுடன் அதனை நாங்கள் பதிவு செய்வோம் எனினும், பக்கவிளைவை எதிர்நோக்கும கோவிட்-19 தடுப்பூசி பெற்றவர்கள் அதுகுறித்து தெரிவிக்கலாம் என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்துள்ளோம் என்றார் அவர்.

இங்குள்ள ராஜா பெரேம்புவான் ஜைனாப் 11 மருத்துவமனையில் உள்ள சிறப்பு தடுப்பூசி மையத்திற்கு வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் மந்தமாக அதாவது ஏழு விழுக்காடு மட்டுமே பதிவாகியுள்ளதாக சிறார் தடுப்பூசித் திட்ட நடவடிக்கைக் குழுவின் தலைவருமான அவர் சொன்னார்.

நாட்டிலுள்ள பள்ளி செல்லும் 27 மாணவர்கள் உள்பட 36 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்களின் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது என்ற சரியான முடிவை எடுக்கும்படி பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :